இன்று ஏனோ , நீண்ட இடைவெளிக்கு பின்,
காண்பதெல்லாம் கவிதையாய் புலப்படுகிறது..
இசை இனிக்கிறது..
தேநீர் சுவைக்கிறது..
காதல் கூடி திளைக்கிறது..
நினைவில் இன்பம் சுரக்கிறது..
மீண்டும் ஒருமுறை வானம், வெயில், மழைத்துளி,
நான், என எல்லாமே அழகாய் தெரிகிறது..
என்றோ தொலைத்த பொருள், திடீரென
கையில் கிடைத்தது போல் மனம் நெகிழ்கிறது..
எங்கிருந்து புறப்பட்டது உன் ஞாபகம் என்று தெரியவில்லை..
பழைய புகைப்படத்தில்,
அன்று பார்த்த முகம் தேடி வியப்பதுபோல்,
புத்தகத்துக்கு நடுவே, என்றோ மறைத்துவைத்த-ஆலிலை
இன்றும் பச்சை பொய்க்காதிருப்பது போல்,
என் நினைவில் , இன்றும் பச்சையாகவே சிரிக்கிறது,
நான் அறிந்த நீ..
வருடங்கள் உருண்டோடி,
வாழ்க்கையின் ஓட்டத்தில்,
திருமணம், குழந்தை, கடமை, அலுவல் என
எத்தனையோ மாறியிருக்கக்கூடும்,
காதோரம் தலைமயிர் நரைதிருக்க கூடும்..
நெற்றி சற்றே சுறுக்கமடைய தொடங்கி இருக்கும்..
யாரையும் விட்டு வைப்பதில்லை காலச் சுழலின் கோர பற்கள்..
இருப்பினும் என் நினைவில் சேகரித்து-
சிதையாமல் வைத்து காத்து வருகிறேன்,
இது எதுவும் உன் மேல் சுவடு தொடுவதற்கு முன் ,
நீ நீயாக இருந்த, அந்த உன் சுயத்தின் பிம்பத்தை..
உன்னை அழைத்து பேச நினைக்கும்போதெல்லாம் ,
தவிர்த்துவிடுகிறேன்..
உன் நிசங்கள் என் நினைவுகளை விட அழகாக இருக்க முடியாது என்று அறிந்தே..
என் நினைவுகளில் நீ இன்னும் மிடுக்குடன் , கண்களில் ஒளியுடன்
நடையில் திமிருடன், லட்சிய வெறியுடன்
கள்ளமில்லாத சிரிப்பும், நேர்மையும்
அது தரும் தன்னம்பிக்கையும்
மிளிர நடை போடுகிறாய்..
உன் நினைவிலும், என் அதே பழைய பிம்பம் இருக்கும்தானே..
உன் நினைவுகளில் நான் இன்னும் கவிதை கண்ணியம்
பருத்தி உடை, தேநீர்
என அழகான தென்றலாய் வீசி கொண்டிருக்ககூடும்..
மீண்டும் அழைத்து பேசி, 'எப்படி இருக்கிறாய்' என்று துவங்கி..
நம் குடும்பம், வேலை, பெற்றோர், பிள்ளைகள் என
சாமான்ய உண்மைகள் எதற்கு?!!
நம் நினைவுகளிலாவது , அழிந்துவிடாது அப்படியே இருக்கட்டும் ,
யதார்த்த வாழ்வில் முதிர்ந்து தொலைந்துவிடாத,
நம் இளந்தளிர் சுயங்கள்..

0 கருத்துகள்:
கருத்துரையிடுக