செவ்வாய், 25 ஜூன், 2019 | By: Ananda

மெளனத் தீ..


சொற்கள் எல்லாம் தீர்ந்து போயின..
தீயென பற்றி எரிந்தது அவள் மௌனம்..
அதை அணைக்க இயலாது தவிக்கையில்,
நீர் தெளிக்க ஒரு கையும் நீள வில்லை,
அந்த மௌனம் சுடர்விட்டு மெல்ல எரிந்தது..
அதை மறைக்க ஆயிரம் சத்தங்கள் தேவை பட்டன..
உங்கள் ஒவ்வொரு வீட்டிலும் ஒலிக்கிறது அந்த மௌனம்..
சிலர் வீட்டில் சீரியல் சத்தம்..
சிலர் வீட்டில் ரேடியோ சத்தம்..
சிலர் வீட்டில் குழந்தைகளை திட்டும் சத்தம்..
இப்படி மறைக்கவும் மறக்கவும் எத்தனையோ சத்தங்கள்..
ஆயினும் அந்த மௌனத் தீ சத்தமாக எரிந்து கொண்டுதான் இருக்கிறது!!
காது கொடுத்து கேளுங்கள் சுயநல மூடர்களே..
வெள்ளி, 11 ஜனவரி, 2019 | By: Ananda

தீராத ஆசை..




படுக்கையில் உனைவிட்டு எழுந்து வர யத்தனிக்கையில்-
என் உடல் வெப்பம் விலகுவதை வைத்து,
சட்டென்று திடுக்கிட்டு எழுந்து, என்னைக் கட்டிக்கொள்கிறாய் ..
என்னைத் தொடர்ந்து சமயலறை புகுந்து,
அக்காளை பள்ளிக்கு அனுப்பும் வரை பார்த்துவிட்டு..
இங்குதான் இருக்கிறாள் அம்மா என்று- 
உறுதி செய்து கொண்டு தூங்கும் உன்னை..
போர்வைக்குள் புதைந்து கிடக்கும் என் புதையலை,
பார்த்துக் கொண்டே இருக்க தூண்டுகிறது..
உன்னை மீண்டும் கருவில் கிடத்த ஆசையில்லை..
நீ வளர்ந்து ஓவியம் வரையவோ,
கவிதைகள் புனையவோ ஆசை படவில்லை,
மடிமீது அமர்ந்து, மார்மீது சாய்ந்து,
கழுத்தை இரு கைகளால் கட்டிக்கொண்டு ,
என் கன்னங்களில் முத்தமிட்டு..
ஒரு புன்னகை செய்வாயே..
கண்களில் மின்னலும், இதழில் சிரிப்புமாய்,
இப்படியே என் இரு கைகளுக்குள் இழைந்து 
இருந்துவிடடி என் கண்மணி..
பள்ளியும் வேண்டாம்..பருவமும் வேண்டாம்..
யதார்த்தத்தால் சிதைந்து விடாத புன்னகையும்,
வெகுளித்தனம் குன்றாத பார்வையும்,
உனக்காவது மிஞ்சி இருக்கட்டும்..