இன்றொரு மாலை உன்னுடன், இனிதாக
எதிர்பாராமல் சிதறிய சில்லறைகளாய்-
சில நொடிகள்!
சிலுவைகளை இறக்கி வைத்துவிட்டு-
என் சுயத்தில் உன்னோடு
லயித்து கிடந்தேன்
சில மணித்துளிகள்!!
இன்றொரு நாள்
மீண்டும் மாறினேன்-
நீர் குமிழிகளை
காற்றில் துரத்தும்
அந்த சிறுமியாக..
பலூன் கொத்துக்களை பார்த்ததும்
பரவசமடையும் அந்த சிறுமியாக..
சாலையோர காட்டு பூக்களில்
வசந்தத்தின் புன்னகை அறிந்த சிறுமியாக..
சலனங்கள் ஏதுமின்றி
சிரிக்க தெரிந்த பழைய நானாக..
துரு துருவென்று கண்களால்,
உன்னை வெல்ல துடிக்கும்
உன் கல்லூரி கள்ளியாக..
குறும்புகளால் உன்னை,
சீண்டி இன்பம் கொள்ளும்
அந்த செல்ல சிணுங்கலாக..
மீண்டும் இன்னொரு மாலை இப்படி
என்று வாய்க்குமோ அறியேன்!
அதுவரை இன்றைய மாலையின் நினைவுகளை-
சுமந்தபடி காத்திருப்பேன்!!
பலூன்களும், வழலை குமிழிகளும் கொண்டு வா..
உன்னுடைய அவள் மீண்டும் உயிர்த்தெழ!!

0 கருத்துகள்:
கருத்துரையிடுக