புதன், 7 ஜனவரி, 2015 | By: Ananda

பள்ளி விடுமுறை..




மேடும் பள்ளமுமாய், குண்டும் குழியுமான சாலைகளில்,
முழங்கால்வரை மழைநீர் வெள்ளம்,
மண்புழுக்களும்,தென்னை ஓலைகளும்-
மிதந்து வரும் நீரில்,
சீருடை அணிந்து,
அரிசி மூட்டைகளை ஒத்த புத்தகப்பை சுமந்து,
அதனோடு கூடவே ஒரு சாப்பாட்டு பையும் தூக்கிக் கொண்டு,
கூரை ஒழுகும் ஓர் பள்ளிக்கு,
மெது மெதுவாய் ஊர்ந்து சென்று,
வாசலை அடைந்தால்....
பள்ளி விடுமுறை!!!!!!
அந்த நொடியின் ஆனந்தம்...
சொல்லில் அடங்காது..
வீட்டைச் சுற்றி,தீவைப்போல் நாற்ப்புறமும் நீர்த் தேங்க,
அதில் நண்டுகளையும், நண்டு குழிகளையும், எண்ணிக் கொண்டு,
தவளைச் சத்தம் கேட்டுக்கொண்டே உறங்கிய காலமது...

இன்று இங்கு அயல் நாட்டில்-
கொட்டும் பணி,கடும் குளிர்,
அதிவேக காற்று,புயல் எச்சரிக்கை,
நேற்று இரவே, முகநூலில் பள்ளி விடுமுறை அறிவிப்பு!!!
இன்று காலை, இன்னமும் உறங்குகிறாள் என் மகள்..

மார்கழி...





விடியலில் மூடுபனி,
வீடுகள்தோறும் வாசலில் கோலங்கள்,
கோலத்தின் நடுவே சாண உருண்டை,
அதில் மஞ்சள் கதிரவன் போல் சிரிக்கும்-
 பூசணிப் பூ,
வானொலியில் அமுதமென பொழியும் திருப்பாவை,
கேட்டுக்கொண்டே வாசலில் அகல் விளக்கேற்றி வைப்பாள் பாட்டி,
 மாலையில் தொலைக்காட்சியில் திருவையாறு கீர்த்தனைகள்,
திருவாதிரைக் களி பிரசாதம்,
மாதங்களில் மார்கழி....