ananda

கைப்பேசியை கண நேரமும் பிரியாத வழக்கம்,அன்று,
அவசர,ஆபத்துக்கு கூட,வீடு முழுவதும்
கைப்பேசியைத் தேடும் வழக்கம்,இன்று!!!
கனவுக்கும்,கற்பனைக்கும்,கவிதைக்கும் மட்டுமே
நேரம் இருந்தது, அன்று,
கனவுக்கு இடமில்லாத தூக்கமும்,
கவிதை எழுத முடியவில்லை என்ற ஏக்கமும் மட்டுமே,இன்று!!!!
முழு நேரக் காதல் நினைவுகளும்,சில நேர
எதிர்கால கனவுகளும்,அன்று,
முழு நேர நிகழ்கால சிக்கல்களின்,சிந்தனைக்கு-இடையே,
சில நேர கடந்த கால நினைவுகள் இன்று!!
தொலைவில் இருந்தால் கூட ,தொலைபேசியில் ஓராயிரம்
கதை பேசினோம்,அன்று,
ஒரே வீட்டில்,இருந்தும் கூட,ஒரு நாளில் ஒன்பது வார்த்தைகள்
கூட பேச வழியில்லை,இன்று!!!
பிறக்க போகும் குழந்தைக்கு,காதலிக்கும்போதே
பெயர் வைத்தோம்,அன்று!!!
பிறந்த பிள்ளைக்கோ,புதிதாய்
வேறு பெயர்வைத்து அழைக்கிறோம்,இன்று!!!!
செல்வி திருமதியாய்,காதலி மனைவியாய்
மாறிவிட்ட இந்த இடைப்பட்ட காலத்தில்,
அன்று முதல் இன்று வரை மாறாத ஒன்று,
எங்கள் காதலுக்கு அடையாளமாய்,
இன்றும் தொடரும் ஏராளமான சண்டைகள்!!
ananda

மணவாளன் கைப்பிடித்தப் பின்,
மறந்துப்போன பழைய நாட்குறிப்பை
தூசித்தட்டி,வெளிக் கொணர்ந்தேன் இன்று,
மண்ணில் இன்னும் மலராத
என் மலர்க்கொடி உனக்காக,
ஆயிரம் கோடி அணுக்கள்
உறைந்திருக்கும் என் குருதியிலே,
முதன் முதலாக உயிர் பெற்றுவிட்ட
என் உயிர்த் துளியடி நீ...
நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கிறேன்,
என்னை மீண்டும் எழுதத் தூண்டிய
புதுக்கவிதை-உன்னைக் கையில் ஏந்த,
உன் கிள்ளைக் குரல் கேட்க,
உன்னை வாரி அணைக்க,
நீ தத்தி-தத்தி நடை பழகும்
அழகை பார்த்து ரசிக்க,
உன் பிஞ்சு விரல் பிடிக்க,
உன் ஒரு முதல் சொல் என் காதில் ஒலிக்க,
இன்னும் 6 மாதம் காத்திருக்கிறேன் உன் அம்மா!!!!
ananda

கணிதம்,அறிவியல்,தொழில்நுட்பத் திறன்,நுண்ணறிவு,சமயோசிதம், என்று
நுழைவுத் தேர்வுக்கே ஆயிரம் அடிப்படை தகுதிகள்!!
அதையும் தாண்டி நேர்முகத் தேர்வு,
இதையெல்லாம் கடந்து,
ஓரிரு ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததற்கு கிடைத்த வரமாய்,
ஆயிரக் கணக்கில் மாத சம்பளம்,
லட்சக் கணக்கில் வருட சம்பளம்,
என்று பல்வேறு கனவகளொடு,
எதை எதையோ சாதிக்க போகிறோம் என்ற துடிப்போடு,
கல்லூரி முடித்த கையோடு,
கள்ளம் கபடம் அறியாத புன்னகையோடு,
தனித்தன்மையைக் குறிக்க கொடுக்கப்பட்டது
அந்த அடையாள அட்டை என்ற நம்பிக்கையோடு,
பன்னாட்டு தொழில் நிறுவனத்துக்குள் நுழையும்-
எத்தனையோ மாணவர்கள் அறிவதில்லை,
அந்த அடையாள அட்டை,அவர் தம் அடையாளத்தையே
தொலைப்பதர்க்கு கொடுக்கப்பட்டது என்று,
உள்ளே நுழைந்த ஓர் ஆண்டுக்குள்,
புது புது பாடங்கள்,
போலியாய் சிரிப்பது,
சுய விளம்பரம் செய்வது,
காரண காரியம் ஏற்ப நட்பு கொள்வது,
கீரைக் கட்டுக்குள் சேர்த்து கட்டப்பட்ட
கீரை தண்டுகள் போல் இருப்பது,
நியாய விலைக் கடையின் பின் வரிசையில் நிர்ப்பவர்,
முன் வரிசையில் இருப்போரை தாண்டிச் செல்ல வழி தேடுதல் போல,
எந்நேரமும் சக தொழிலாளியை எப்படி பின் தள்ளுவது என்று சிந்திப்பது,
இப்படி எத்தனையோ மாற்றங்கள்,
இவைதான் தகவல் தொழில்நுட்ப வேலையின் வெற்றி ரகசியங்கள்,
(என்னைப்போல் பலர் வெற்றி பெறாத காரணங்கள்)
ஆட்டு மந்தைகளுக்கும் எங்களுக்கும் எத்தனையோ
ஒற்றுமை இருந்தாலும்,
ஒரு சிறிய வித்தியாசம் உண்டு,
மந்தையின், ஆடுகள் காலையில் மேய்வதர்க்கு திறந்து விடப்பட்டு,
மாலையில் மீண்டும் அடைக்க படுகின்றன,
நாங்களோ காலையில் அலுவலகத்தில் அடைக்கப்பட்டு,
மாலையில் வீடு திரும்ப திறந்து விடப் படுகிறோம்!!!