வியாழன், 18 மே, 2023 | By: Ananda

என் வாழ்வில் வாணவில்லாக வந்த மனிதர்களுக்கு நன்றிகள்..

 தமிழ் மீதும், வாசிப்பு, கவிதைகள், கதைகள் என என்னை ஊக்குவித்து, அந்த திசையில் பயணிக்க காரணமாக சில நல்ல உள்ளங்கள் என் வாழ்வில் அமைந்தன. முதன் முதலில் கவிதை மீது ஆர்வம் பிறந்தது, நான்காம் வகுப்பில், ஒரு free period, அதாவது வழக்கமாக வரும் வகுப்பு ஆசிரியர் விடுமறையில் சென்றிருந்ததால், சுந்தர் ராமன் எனும் ஆசிரியர் வந்து வகுப்பில் கவிதைகள் பற்றி பேசினார். சிறுவர்களை ஈர்க்கும் வகையில் சில வரி கவிதைகள் சொன்னார். எங்களை எல்லாம் கவிதை எழுத ஊக்குவித்தார். அவர் சொன்னதில் இரு வரி ஞாபகம் இருக்கிறது இன்னும் எனக்கு.

 "பேசும் எலி, பேசும் எலி பொய்ய சொல்லிச்சான்,

அது பொய்யை சொன்ன காரணத்தால் வாயி போச்சுதாம்"

இப்படியாக அவர் பேசி விட்டு போன அடுத்த வகுப்பே நான் நிலவை பற்றி எதோ சில வரிகள் எழுதி அவரிடம் எடுத்து சென்று நீட்ட, அவர் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதை பாராட்டி , ஒரு பாராட்டு கவிதையும் எழுதி கொடுத்தார். என் வாழ்கையின் மிகச்சிறந்த பொக்கிஷமாக அதை வைத்திருந்தேன். அந்த காகிதம் பிய்ததுக்கொண்டு கிழிந்த நிலையிலும் ஒரு பென்சில் பாக்ஸில் பத்திர படுத்தி வைத்திருந்தேன். இருந்தும் ஏழாம் வகுப்பு படிக்கும் போது, வீடு மாற நேர்ந்தது. அதில் எப்படியோ தொலைந்து போனது. நான் முதலில் எழுதிய கவிதையும், அதை பாராட்டி அவர் எழுதிய கவிதையும்..இன்றும் என் பெரிய இழப்பாக அதை எண்ணுகிறேன். 


       அவரை தொடர்ந்து இன்னும் இரண்டு பேர், என்னை எப்பொழுதும் பாராட்டி நம்பிக்கை அளித்து ஊக்கம் தந்தவர்கள். ஒன்று என்னுடைய மாமா Ananchaperumal C  அவர்கள். புத்தகங்கள், இலக்கியம், மொழி, கவிதைகள், கதைகள் என்றால் அவரிடம் பேசி கொண்டே இருக்கலாம். கடல் போன்ற இலக்கிய அறிவு அவருக்கு. அதில் ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும், ஒரு துளியையாவது பருகிவிட வேண்டும் என்ற வேட்கை எனக்கு. எனக்கும் அவருக்கும் குறைந்தது 40 வயது வித்யாசம் இருக்க கூடும். எனினும் மிகவும் அன்பாக பாராட்டி உற்சாகப் படுத்துவார். சென்ற வருடம் பூவுலகம் நீத்தார். அதற்கு முன் இதை எழுதி இருந்தால் எவ்வளவோ மகிழ்ச்சி அடைந்து இருப்பார். எப்பொழுது சந்தித்தாலும் என்ன புத்தகம் படிக்கிறேன் என்று கேட்பார். அவரிடம் இருந்து பட்டுகோட்டை பாடல்கள், மற்றும் பல புத்தகங்கள் எடுத்து வந்திருக்கிறேன்.


    அவரை அடுத்து, எனக்கு மொழி மீதும் கவிதைகள் மீதும் பற்று ஏற்பட காரணமாக இருந்தவர், ஒரு நேசமிகு மனிதர், சுந்தர் ராஜன் அண்ணா. என் அம்மா state Bank of India வங்கியில் 89 முதல் 2017 வரை பணிபுரிந்தார். என் தந்தை இறந்த பின், அவரது வேலை என் அம்மாவிற்கு கிடைத்தது. அம்மா முதல் முதலில் வங்கியில் செய்த வேலை, despatch பகுதியில். அதாவது 30 வருடங்களுக்கு முன் கணக்கு வழக்குகள் எல்லாம் நீண்ட கனமான நோட்டு புத்தகங்களில்(ledger) எழுதப்பட்டன. அதை எழுதுவது, சரி பார்ப்பது போன்ற வேலை அம்மாவுக்கு. கிண்டி branch மேல் மாடியில் ஒரு மூலையில் ஒரு அறை. அங்கே ஒரு 6,7 பேர் இந்த வேலை செய்து வந்தனர். சனிக்கிழமைகளில் மாதம் ஒரு முறை அல்லது இரு முறை, என் அம்மாவோடு நானும் வங்கிக்கு செல்வேன். அறை நாள் தான் என்பதால் அழைத்து செல்வாள். இயற்கையாகவே வாயாடி என்று பெயர் எடுத்திருந்த நான், அங்கு என் அம்மாவுடன் வேலை பார்த்த அனைவருக்கும் கரும்பலகையில் பாடம் எடுப்பது, கேள்வி கேட்பது என்று பேசிக்கொண்டே இருப்பேன். இருப்பினும் அறை நாள் கழிக்க வேண்டுமே. என் அதிர்ஷ்டம், அந்த அறையில் தான் வங்கியின் நூலகம் இருந்தது. எனவே எதாவது புத்தகங்களை எடுத்து படித்து பொழுதை கழிப்பேன். புத்தகங்கள் அனைத்தும் பெரியவர்கள் அகவைக்கு உகந்ததாக இருந்ததால், முடிந்தவரை கவிதை புத்தகங்கள் தான் எடுப்பேன். அங்கு அடிக்கடி வந்து போகும் அண்ணா, சுந்தர் ராஜன் அண்ணா. அழகாக கவிதை எழுதுவார். நான் எழுதி கொட்டிய வரிகளை கவிதை என்று ஏற்று பாராட்டி, பதிலுக்கு எனக்கு முத்தான கவிதைகள் எழுதி கொடுத்து உற்சாக படுத்தினார். 


இதை எல்லாம் இன்று நினைதுகொள்ள காரணம், பரணில் இருந்து பழைய புத்தகங்களை இறக்கி எடுத்த போது, இன்னமும் பல கிண்டி SBI library புத்தகங்கள் என்னிடம் இருந்தன. சிறு வயதில் படித்து இன்னமும் மனதிலேயே நிற்கும் ஒரு கவிதை. யார் எழுதியது என்று கூட இத்தனை நாள் நினைவில்லை. இன்று அந்த புத்தகம் கிடைக்க, அது அமுத பாரதியின் வரிகள் என்று தெரிந்தது. அந்த கவிதையும் புத்தகத்தையும் புகைப்படமாக பகிர்கிறேன் இந்த பதிவில். எதையோ இழந்து, எல்லாரிடமும் எதையோ தேடுகின்ற சிறுவர்களிடம், எந்த எதிர்பார்ப்பும் இன்றி, அன்பு செய்யும் மனிதர்கள், நொடிப் பொழுதில் அந்த பிள்ளைகளின் வாழ்வில் வானவில் போல் வந்து சென்றாலும், அவர்களின் தாக்கம் வாழ்நாள் முழுதும் பசுமையான நினைவாக அந்த குழந்தைகளின் மனதில் பதிந்து விடுகிறது. நான் இன்றும் நான் சந்திக்கும் ஒவ்வொரு சிறு வயதில் இழப்பை அறிந்த குழந்தைக்கும், ஒரு வானவில்லாக இருக்க முயற்சிக்கும் காரணம், இவர்களை போல் என் வாழ்வில்  சந்தித்த சில நல் உள்ளங்கள்தான்.








0 கருத்துகள்: