திங்கள், 16 ஏப்ரல், 2018 | By: Ananda

சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்..





     கல்லூரிப் பேருந்தில் எப்பொழுதும்போல அவள் ஏறினாள்..எப்போதும் போல முன்னமே ஏறிவிட்ட அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..அவள் கண்கள் அவனைத்தான் தேடுகின்றன என்று அறிந்திருந்ததால் உள்ளூர புன்னகைத்துக் கொண்டே அவளை பார்த்து கொண்டிருந்தான். அவள் கண்கள் அவனை கண்டுகொண்டன..அவள் முகத்திலும் அதே புன்னகை பரவியது.அவள் ஏதும் அறியாதவள்போல் இருக்கையில்  அமர்ந்து கொண்டாள்.காலைகளில் பல இருக்கைகள் இடைவெளி விட்டு உட்கார்ந்த அவர்கள், மாலைகளில் முன்னும் பின்னுமான இருக்கைகளில் நண்பர்களோடு உட்கார்ந்து பேசி கொண்டே போவார்கள்..இவை அல்லாது காலை மாலை விடுமுறை நாட்கள் என்று இடைவிடாது தொலைபேசியில் அளவளாவுவார்கள்...அவளோ அவனோ அத்தனை அழகல்ல..ஆனால் அவளை தேடிய அவன் கண்களும் , அவனை தேடிய அவள் கண்களும், தேடிய விழிகளுக்கு கிடைத்த பார்வை பரிசுகளும் அழகு..

      80களில் பிறந்த பிள்ளைகளுக்கு புரியும்..கல்லூரிப் பருவம் முழுக்க வீட்டில் எந்த நேரமும் சன் மியூசிக் தொலைக்காட்சி , ரேடியோ மிர்ச்சி மோகம் ஆரம்பித்த காலம் அது..அவர்கள் இருவருக்கும் ஒன்றாக பிடித்து ரசித்த பல காதல் பாடல்கள் இருந்தன..அவர்களுக்குள் வளர்ந்து வரும் நட்புக்கும் காதலுக்குமான போராட்டத்தில், பல பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் அவர்கள் உணர்வார்கள்.அந்த சமயத்தில் பல பாடல்கள் அவர்களுக்கு பிடித்தவை ஆனாலும், 'தீணா' திரைப்படத்தில் வரும் "சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்" என்ற பாடல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானது.எந்த வானொலி அல்லது தொலைக்காட்சியில் அந்த பாடல் வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு தொலைபேசியில் அழைத்துக் கொள்வார்கள்..எதுவும் பேசாமல் மௌனமாக தொலைபேசியின் இரு மூலையில் அந்த பாடலை இணைந்து ரசிப்பார்கள்..அவர்களுக்கு நடுவே அந்த பாடல் ஆயிரம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும்...

      இன்று 15 வருடங்கள் கழித்து மணம்முடித்து இரு பெண் பிள்ளைகளை பெற்றுவிட்ட அவர்கள், எல்லோரையும் போலவே அலுவலக வேலை, பிள்ளைகள் பள்ளி, ஓட்டம் , சண்டை, சச்சரவு என்று அன்றாட வாழ்க்கை சூழலில் உழன்று எழுந்தாலும்..திடீரென யூடூபில் அதே "சொல்லாமல் தொட்டும் தென்றல்" பாடல் ஒலிக்கும்போதேல்லாம்  ஒரு சின்ன பார்வை பரிமாற்றமோ, உதட்டோர புன்னகையோ, விழியோர நீர்த்துளியோ அல்லது விரல்கள் கோர்த்துக்கொண்டோ ஒரு நொடி ,தொட்டுச்செல்லுகிறது அவர்களின் அதே கல்லூரி நினைவும்,காதலும்..


புதன், 20 டிசம்பர், 2017 | By: Ananda

சென்னையில் ரசமலாய்..


நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்..என் அம்மா வழி குடும்ப பாரம்பரிய குணங்கள் என்னிடம் மிகுதி. அப்படி நான் பெற்ற குணங்களில் முதல் பாடம் யாதெனில், எந்த உணவு பொருட்களை எந்த உணவகம் அல்லது கடைகளில் சாப்பிட வேண்டும் என்பது. எனக்கு இனிப்புகள் என்றால் பிரியம். அதிலும் ரசமலாய் என்றால் மிகவும் பிரியம். சென்னையில் ரசமலாய் சாப்பிட சிறந்த இடங்களை வரிசை படுத்தி கூற விரும்புகிறேன். அடுத்தமுறை சென்னை செல்லும்போது மறக்காமல் உண்டு மகிழவும்.

சென்னை பாரிமுனை..சௌகார்பேட் பகுதி அணைத்து மொத்த விற்பனைக்கும் பிரசித்தி பெற்றது..சௌகார்பேட் என்றதும் சேட்ஜீ , புடவைகள், சோலி  என்று ஞாபகம் வரக்கூடும்.அவையெல்லாம் தவிர்த்து சிறந்த வட இந்திய இனிப்புகள் மற்றும் சமோசா, சாட் வகைகளை சாப்பிட இரண்டு கடைகள் உள்ளன.

1.அகர்வால் பவன்,

கோவிந்தப்ப நாய்க்கர்  தெரு , சென்னை  600001

சின்ன கடைதான்..பெரிய ஆடம்பரமோ ஆர்பாட்டமோ அற்ற பெயர் பலகை..எந்த விளம்பரமும் கிடையாது. எனினும் ரசமலாய் சாப்பிட இதைவிட சிறந்த கடை சென்னையில் கிடையாது. ரசமலாய் தவிர பாதாம் கீர், பாசுந்தி, சமோசா இவை அனைத்துமே மிகவும் ருசியாக இருக்கும்.நாவில் கரையும் மிகவும் மிருதுவான ரசமலாய்..

2.காக்கடா ராம்பிரசாத்,

348/343 மின்ட் தெரு, சௌகார்பேட், சென்னை 600001

இந்த கடை காலத்திற்கு ஏற்றாற்போல் இரண்டடுக்கு கண்ணாடி கட்டிடமாக அமைக்கப் பட்டுள்ளது. இங்கேயும் பாரம்பரிய வடஇந்திய இனிப்பு மற்றும் கார வகைகள் மிகவும் அருமையாக இருக்கும்.ரசமலாய், சமோசா, கச்சோரி, டோக்லா மற்றும் பாதாம் கீர் கண்டிப்பாக சுவைக்கவும்.

3.ஸ்ரீ மித்தாய் 

இது பல இடங்களில் உள்ளது..சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், அண்ணா நகர்..இங்கு ரசமலாய், பெங்காலி இனிப்புகள் மற்றும் சாட் வகைகள் அனைத்தும் நன்றாக இருக்கும்.

4. மன்சுக் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ் 

10, ராமஸ்வாமி தெரு, திநகர், சென்னை 600017

திநகர் ரங்கநாதன் தெருவுக்கு பொருள் வாங்க செல்லாதவர் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். துணிமணி, கம்மல் என்று அனைத்தும் வாங்கி முடித்து களைத்து பசியோடு எங்கு சாப்பிடுவது என்று தேடும்போது பிரதானமாக கண்ணில் படுவது வழக்கமான கூட்டமான சரவண,ஆனந்த,பாலாஜி பவன்கள் தான்..அதை  விடுத்து இன்னும் சற்று நடந்தால் அர்ச்சனா ஸ்வீட்ஸ் கடையை தாண்டி வரும் தெருவின் கடைசியில் இந்த கடை உள்ளது. கூட்டமின்றி வடஇந்திய உணவு வகைகள் சுவைக்க ஓர் சிறந்த கடை.

5.ஸ்ரீ கிருஷ்ணா/கிராண்ட் ஸ்வீட்ஸ் 

இதற்கென்று கடை தேடி தனியாக செல்ல முடியாது என்போர் அருகில் இருக்கும் கிருஷ்ணா  ஸ்வீட்ஸ் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இல் ரசமலாய்
உண்டு மகிழலாம்.

பின்குறிப்பு : அடையார் ஆனந்த பவன் கடைகளில் வாடிக்கையாக இனிப்புகள் வாங்குபவள் தான் ஆனாலும், கண்டிப்பாக ரசமலாய் மட்டும் அங்கு வாங்குவதில்லை, ஒரு முறை சுவைத்த பிறகு.
வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017 | By: Ananda

என்னவனின் இரு விழி..


எனக்கு கிடைப்பதில்லை,
அவளுக்குத்தான் கிடைக்கிறது,
பார்த்ததும் ஒரு புன்னகையும்,
வீடு திரும்பியதும் வாரி அணைப்பும்,
நாள் முழுவதும் நடந்த கதைகள் விசாரிப்பும்,
தட்டில் ஒரு வாய் சோறும்,
இரவில் மார்போடு அணைப்பும்,
தோளொடு தூக்கமும்,
கனவு கலைந்து அழுதால் தேற்றி அரவணைப்பும்,
காலை அலுவல் செல்லும்போது முத்தமும்,
அவர்களுக்கே சென்று சேர்கிறது..
இரு மகள்களை பெற்ற
மனைவியின் நிலை..
திங்கள், 20 மார்ச், 2017 | By: Ananda

சொத்து பத்து!!

ஆலமரமாய் தாங்கி,
ஆயிரம்முறை திட்டித் திருத்தி,
ஆயிசுக்கும் தைரியமூட்டி,
ஆழ்கடலென எங்கள் 'ஆயா' !!

அதிர்ந்து பேசாதவள்,
அயராது உழைத்து,
அன்பை மட்டுமேச் சொரியும் பூமரம்,
அழகுக் குறையாத மெழுகு என் 'அம்மா' !!

அளந்துதான் பேசுவான்,
அதில் அர்த்தம் அதிகம் இருக்கும்,
அன்பை கொட்டியதில்லை,ஆனால்-
அறிவையும், அறிவுரையும் கொடுத்துச் சென்றான்,
உள்ளத்தில் உள்ளதை உரைத்து காட்டியதில்லை,
உலகம் எப்படி என்று காட்டிச் சென்றான்,
தூக்கிச் சுமக்கவில்லை,
உன் சிறகே உனக்குத் துணை என்று கற்றுக் கொடுத்தான்,
உருவத்திலும்,அலாதியான கிறுக்குத்தனத்திலும்,
அடங்காத வைராக்கியத்திலும்,
என்னை போன்றவன்,
என் கருவறை பகிர்ந்தவன், என் 'அண்ணன்' !!

தோழன்,பிரியமானவன்,
தலைவன்,தந்தை, எல்லாமானவன்,
என் அறிவை செயல்பட செய்வதும் அவன்,
  அதை செயலிழக்க செய்வதும் அவன்,
முதலும் இறுதியுமாய் 
எனை அடக்கிய ஆடவன்,
எனை ஆள்பவன், என்னால் ஆளப்படுபவன்-
என் ஆதவன், என் 'கணவன்' !!

ஆசைக்கும் ஆஸ்திக்கும்,
ஆதிமுதல் அந்தம் வரைக்கும்,
என் இரவு பகலாய்,
என் உயிர் மெய்யாய்,
பேர் சொல்லப் பிறந்த பூம்பாவைகள்,
ஆறு வயதில் நிதானமான நிலவும்,
ஓர் வயதை தொட தத்தி தத்தி
நடைபழகும் நட்சத்திரமும்,
வாழ்வின் பொருளாகிவிட்ட, என் இரு 'மகள்கள்' !!

பள்ளிப் பருவத்தின்
பசுமையான நட்பு,
பல புயல்களை தாண்டிய நட்பு,
கருங்கல்லை கூழாங்கல்லாக மாற்றிய முதல் நதி(அடி) அவள்!!

கல்லூரி முதல் நாள் முதல், இன்று வரை,
மழையில் குடையாய்,இதமான வெயிலாய்,
இனிமையான தலை வலியாய்,
நான் நானாகவே இருக்க இடம் கொடுத்தவள்!!

ஒரே ஊரில் ஒன்றாக கல்லோரி சென்று,
ஒய்யாரமாய் உலா வந்ததும் உண்டு,
ஓராயிரம் பிரச்சனைகளில் ஒன்றாக விழுந்து எழுந்ததும் உண்டு,
தினம் தினம் சிறு கதைகள் பேசுவதில்லை நாங்கள்,
பெரும் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொண்ட நாங்கள்,
தூரமாய் பேசாமல் இருந்தாலும் என்றும் என் தோழி!!

முதல் காதல் போல முதல் சம்பளமும்,
புது சுதந்திர வேகம்,
அலுவலக வாழ்க்கை,
கேட்க ஆளின்றி துள்ளி திரிந்த காலம் முதல்,
இன்று என் பிள்ளையும் அவள் பிள்ளையும்-
ஒன்றாக விளையாடுவது வரை,
கடந்து வந்த நட்பு!!

நான்கு தோழிகளுக்கு இணையாய்,
ஒரே ஒரு தோழன்,
உரிமைக்கு அர்த்தம் கொடுத்தவன்,
எப்பொழுது எங்கே எதற்கு என்று
கேள்விகள் கேட்டாலும்,
எப்பொழுதும் எங்கேயும் எதற்கும்
வந்து நின்றவன்,எனக்காக!!

சொத்து பத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை நான்,
ஈடில்லாச் சொத்தாக இவர்கள் பத்து பேரை தான்
சேர்த்து வைத்திருக்கிறேன்!!
என் தீதும் நன்றும் இவர்கள் கண்டு ஏற்றவர்கள்,
என் வெற்றியும் தோல்வியும் இவர்களைச் சாரும்!!
புதன், 7 ஜனவரி, 2015 | By: Ananda

பள்ளி விடுமுறை..




மேடும் பள்ளமுமாய், குண்டும் குழியுமான சாலைகளில்,
முழங்கால்வரை மழைநீர் வெள்ளம்,
மண்புழுக்களும்,தென்னை ஓலைகளும்-
மிதந்து வரும் நீரில்,
சீருடை அணிந்து,
அரிசி மூட்டைகளை ஒத்த புத்தகப்பை சுமந்து,
அதனோடு கூடவே ஒரு சாப்பாட்டு பையும் தூக்கிக் கொண்டு,
கூரை ஒழுகும் ஓர் பள்ளிக்கு,
மெது மெதுவாய் ஊர்ந்து சென்று,
வாசலை அடைந்தால்....
பள்ளி விடுமுறை!!!!!!
அந்த நொடியின் ஆனந்தம்...
சொல்லில் அடங்காது..
வீட்டைச் சுற்றி,தீவைப்போல் நாற்ப்புறமும் நீர்த் தேங்க,
அதில் நண்டுகளையும், நண்டு குழிகளையும், எண்ணிக் கொண்டு,
தவளைச் சத்தம் கேட்டுக்கொண்டே உறங்கிய காலமது...

இன்று இங்கு அயல் நாட்டில்-
கொட்டும் பணி,கடும் குளிர்,
அதிவேக காற்று,புயல் எச்சரிக்கை,
நேற்று இரவே, முகநூலில் பள்ளி விடுமுறை அறிவிப்பு!!!
இன்று காலை, இன்னமும் உறங்குகிறாள் என் மகள்..

மார்கழி...





விடியலில் மூடுபனி,
வீடுகள்தோறும் வாசலில் கோலங்கள்,
கோலத்தின் நடுவே சாண உருண்டை,
அதில் மஞ்சள் கதிரவன் போல் சிரிக்கும்-
 பூசணிப் பூ,
வானொலியில் அமுதமென பொழியும் திருப்பாவை,
கேட்டுக்கொண்டே வாசலில் அகல் விளக்கேற்றி வைப்பாள் பாட்டி,
 மாலையில் தொலைக்காட்சியில் திருவையாறு கீர்த்தனைகள்,
திருவாதிரைக் களி பிரசாதம்,
மாதங்களில் மார்கழி....
திங்கள், 7 ஜூலை, 2014 | By: Ananda

ஏக்கம்



என்னதான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து,
ஆடம்பர வாகனங்களில் பயணித்து,
நவநாகரீக வாழ்வு முறையை ஏற்றாலும்,
அந்த மொட்டைமாடி நிலாவுக்கும்,
குட்டிச்சுவர் வெட்டிக் கதைகளுக்கும்,
பேருந்து ஜன்னல் தெறிக்கும் மழைச் சாரலுக்கும்,
ஓட்டமும் கூட்டமுமாய் மின்தொடர் வண்டி பயணத்துக்கும்,
சுட்டெரிக்கும் வெயிலில்,வழியும் வேர்வை-
உறிஞ்சும் அந்த பருத்தி உடைக்கும்,
அடிக்கொருமுறை நின்று புன்னகைத்து பேசும் முகங்களுக்கும்,
அந்த சாலையோர பூக்கடைகளுக்கும்..
வாசலிலேயே வீற்றிருக்க சொல்லும், 
வண்ணக் கோலங்களுக்கும்
ஏங்கதான் செய்கிறது-
இந்த பாழும் மனம்..