திங்கள், 17 ஜூன், 2013 | By: Ananda

அந்நிய தேசத்து, ஆடம்பர வாழ்க்கை..

 
 
அறைக்கு அறை , நான்கு தொலைபேசிகள்,
 
அறைச் சுவரையே அடைக்குமளவு தொலைக்காட்சி,
 
ஒவ்வொரு முறையும் புதிதாய் அணிந்துக்கொள்ள-
 
அளவுக்கு அதிகமான ஆடைகள்,
 
ஓர் அறை அதற்கென்றே,ஒதுக்க வேண்டிய அளவிற்கு-
 
எண்ணில் அடங்கா விளையாட்டுப் பொருட்கள்,
 
இருக்கும் மூன்று பேருக்கு,இப்படியாக நான்கு அறைகள்,
 
எங்கு சென்றாலும், நான்கு சக்கரங்கள் தேவை,
 
நடக்கவே வேலையில்லை,ஆனாலும் மூன்று பேருக்கு-
 
முப்பது காலணிகள்,
 
ஆண்டுக்கு இருமுறை,உலகளாவிய இன்ப சுற்றுலாக்கள்,
 
ஈறாண்டுக்கு ஒருமுறை முடிந்தால்,தாய்நாட்டு பிரவேசம்,
 
கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டால்,
 
பிள்ளைகளுக்கான கடமை தீர்ந்தது,
 
கேட்காமலே மாதம் ஒருமுறை பணம் அனுப்பிவிட்டால்,
 
பெற்றோருக்கான கடமை தீர்ந்தது,
 
இங்கு வீட்டின் நான்கு சுவர்களுக்குள்,
 
புன்னகைப் பூக்கிறதோ இல்லையோ,
 
வீட்டுச் சுவற்றில் ஆணியடித்து மாட்டி வைத்திருக்கிறோம்,
 
எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை!!
 
வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால்,
 
முகத்தில் கண்ணாடியை மாட்டிக் கொள்வது போல,
 
நாகரீக புன்னகையையும், சேர்த்து மாட்டிக் கொள்கிறோம்!!
 
சுற்றிலும் ஆடம்பரம் அள்ளி தெறிக்கும் எங்களுக்கு,
 
குணத்திலும் மனத்திலும் மட்டும் ஏழ்மைக் குடிக்கொண்டிருக்கிறது..
 

வியாழன், 25 ஏப்ரல், 2013 | By: Ananda

என் 'கீர்த்தி '

 
சில சமயம், கருந்திரட்சைகளை,
சில சமயம் மீன்களை,
வேறு சில சமயம் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை-
உன் அழகுக் கண்கள் எனக்கு நினைவூட்டும்..
உனக்கு கயல்விழி, என பெயர்வெய்க்கத் தவறிநேனே-
 
என்று வருந்துகிறேன் பல சமயம்..
உயிரோட்டம் தெறிக்கும் உன் விழிகள்,
குறும்புத்தனம் சொட்டும் உன் குறு குறு பார்வை,
உன் கண்களின் அந்த ஒரு பொட்டு வெளிச்சம்
என் வாழ்வின் இருள் நீக்கப் போதுமானது..
உன் மழலைக் குரலில் என் பெயர் சொல்லி அழைக்கும் ஆனந்தமும்,
எனைக் கட்டி அணைத்து முத்தமிடும் பேரானந்தமும்-
போதுமடி எனக்கு..
அதனினும் பெருஞ்சொத்து வேறில்லை..
என் உயிர்ப்பூ சிந்திய முதல் மகரந்தத் துளியடி நீ-
என் 'கீர்த்தி '!!
 
திங்கள், 29 அக்டோபர், 2012 | By: Ananda

மழைத் துளி..



பொதுவாய் தனித்திருக்கும் என் வீட்டுச் சுவர்களை,

 இன்று அழகாய் நனைத்துக் கொண்டிருக்கிறது

 விடாத மழை,

 வழக்கமாய் சூழ்ந்திருக்கும் அமைதியும், மௌனமும்,
 

 இன்று விரட்டப்பட்டது,
இன்பமான மழையின் இசையால்,

 இருட்டில் பளிச்சிடும் மின்னல், இடியால்...

 தனிமை பிடிக்கிறது,இன்று மட்டும்..

 தனித்த வீடும் பிடிக்கிறது, இன்று மட்டும்..

 கம்பியை நனைத்து கீழே விழக் காத்திருக்கும் மழை துளிகள்-

 என்னை பார்த்து சொல்வது கேட்கிறது,

 "சேரும் இடம் சேரும் வரை, என்னைப் போல்-

பொறுமையாய் பற்றிக் கொண்டு இரு" என்று...


 

எனக்குள் ஒரு தேடல்..



வாழ்க்கையின் எதிர்கால லட்சியத்தை மட்டுமே
பார்வையில் நிறுத்தி,
அதை நோக்கி ஒரே மூச்சாய் பயணிப்பவர்களை பார்த்து-
நான் நினைப்பது உண்டு,
பாதையை ரசிக்க நேரமில்லை இவர்களுக்கு,
சக பயணியை பார்க்கவோ பழகவோ விருப்பமில்லை இவர்களுக்கு,
இன்று பேசும் மழலை முதல் சொல் கேட்காமல்,
 
மழையின் முதல் துளியில் நனையாமல்,
நேசிப்போருடன் சில மணித்துளி மௌனத்தில் கரையாமல்,
நண்பர்களுடன் சிறு குறும்புகள் செய்யாமல்,
பெற்றவர் சிறு குறைகளையும் ஆசைகளையும் தீர்க்காமல்,
கடிவாளமிட்ட குதிரையாய் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில்
என்ன பயன் என்று,நான் யோசித்ததுண்டு..
எனினும் சில நாட்களாய்,மற்றொரு கேள்வி எழுகிறது-
என்னுள் எனை நோக்கியே..
இலக்கின்றி , பாதையை மட்டுமே ரசித்துக்கொண்டு-
 நடந்தென்ன பயன்??
நதியில் இலையாய்,என் வாழ்க்கை..
எனக்கென்று எந்த இலக்கும் இல்லை,
கடமைகள் தீர்ந்தபின்,தொடர்ந்து செல்ல-
சில ஆசைகள் மட்டுமே உள்ளன..
கடமைகள் தீரும்வரை காலம் கடத்திவிட்டு,
பின் எடுத்து நடத்த எத்தனையோ லட்சியங்கள் இருந்தாலும்-
அதிலும் ஒரு தெளிவில்லை எனக்கு..
பத்து வயது பிள்ளை,முதலில் மருத்துவர்,
பின் பொறியாளர்,பின் விஞ்ஞாணி என்று யோசிப்பது போல,
எனக்கே பிள்ளை பிறந்த பின்னும்,இன்றும் பல ஆசைகள்..
எனக்குள் என்று பிறக்கும் அந்த தெளிவு??
என்று பற்றி எரியும் ஒரே லட்சியத்தின், சீரானச் சுடர்??
எந்த சிறு நொடியின் சலனத்தையும்,அசைவுகளையும்
ரசிக்க தவறாத எனக்கு,
பாதை முடிவில் காத்திருப்பதென்ன??

 
வெள்ளி, 6 ஜூலை, 2012 | By: Ananda

இங்கு தான்..





இங்கு புகைப்படத்தில் மட்டுமே புன்னகை பூக்கிறது,

இங்கு உதட்டில் மட்டுமே மலர்ச்சி இருக்கிறது-
உள்ளத்தில் இல்லை,

இங்கு பேச்சில் மட்டுமே நட்பு இருக்கிறது-
செயலில் இல்லை,

இங்கு பாடப் புத்தகத்தில் மட்டுமே பண்பு இருக்கிறது-
பழக்கத்தில் இல்லை,

இங்கு சமூக வலைதளத்தில் தான் சகலமும் நடக்கிறது,


இங்கு துரித உணவு போலவே, துரித உறவும் கிடைக்கிறது,

இங்கு உடையில் மட்டுமே நாகரிகம் இருக்கிறது-
எண்ணங்களில் இல்லை,

இங்கு ஒரு கை உதவியில் நீள்வதற்குள்-
உள்ளத்தில் ஓராயிரம் சுய லாப-நஷ்ட சிந்தனை உழல்கிறது,

இங்கு சின்னஞ்சிறு சந்தோஷங்களுக்கும் பகிர்தலுக்கும்
நேரமின்மை இருக்கிறது,


இங்கு எளிமை ஏழ்மையாகவும், ஆடம்பரம் சுய-கௌரவமாகவும்
கருதப்படுகிறது,

இங்கு நிற்பதற்கும் நடப்பதற்கும் கூட போட்டியும் விளம்பரமும் தேவைப்படுகிறது,

இங்கு செயற்கையாக சகல இயற்கையும் சிருஷ்டிக்கப்படுகிறது,

வருத்தம் யாதெனில் இங்குதான் - நானும் இருக்கிறேன்,
இதே சமூகத்தில் இது போலவேதான் என் மகளும் இருக்க நேரிடும்..


புதன், 16 மே, 2012 | By: Ananda

சுக பிரசவம் அல்ல சுய-பிரசவம்



கருத்தில் கருவிக்கொண்டே இருந்தாலும்-


காகிதத்தில் உதிர மறுக்கும் வார்த்தை போல்..


வாசகர் இல்லாத கவிதையை போல்..


கருவறை வாசலில் முட்டி நின்றும்-


பிரசவிக்க முடியாத சிசுவை போல்,


கிளை நுனியில் துளிர்க்கும் முன்பே-


சறுகாய் உலர்ந்துவிட்ட இலை போல்..


விளையத் துடித்தும்,நிலத்தைப் பிளக்காமல்-


புதைந்து கிடக்கும் விதைப் போல்..


மூடிக் கிடக்கும் இமைகளுக்குள்-


திறக்கத் துடிக்கும் கண்ணின் மணிகள் போல்..


வெளிவர துடித்துக் கொண்டிருக்கிறது-


எனக்குள் கட்டுண்டு கிடக்கும்-உண்மையான நான்!!!!
வியாழன், 8 செப்டம்பர், 2011 | By: Ananda

திருமணத்திற்கு முன்னும் பின்னும்..













கைப்பேசியை கண நேரமும் பிரியாத வழக்கம்,அன்று,


அவசர,ஆபத்துக்கு கூட,வீடு முழுவதும்


கைப்பேசியைத் தேடும் வழக்கம்,இன்று!!!


கனவுக்கும்,கற்பனைக்கும்,கவிதைக்கும் மட்டுமே


நேரம் இருந்தது, அன்று,


கனவுக்கு இடமில்லாத தூக்கமும்,


கவிதை எழுத முடியவில்லை என்ற ஏக்கமும் மட்டுமே,இன்று!!!!


முழு நேரக் காதல் நினைவுகளும்,சில நேர


எதிர்கால கனவுகளும்,அன்று,


முழு நேர நிகழ்கால சிக்கல்களின்,சிந்தனைக்கு-இடையே,


சில நேர கடந்த கால நினைவுகள் இன்று!!


தொலைவில் இருந்தால் கூட ,தொலைபேசியில் ஓராயிரம்


கதை பேசினோம்,அன்று,


ஒரே வீட்டில்,இருந்தும் கூட,ஒரு நாளில் ஒன்பது வார்த்தைகள்


கூட பேச வழியில்லை,இன்று!!!


பிறக்க போகும் குழந்தைக்கு,காதலிக்கும்போதே


பெயர் வைத்தோம்,அன்று!!!


பிறந்த பிள்ளைக்கோ,புதிதாய்


வேறு பெயர்வைத்து அழைக்கிறோம்,இன்று!!!!


செல்வி திருமதியாய்,காதலி மனைவியாய்


மாறிவிட்ட இந்த இடைப்பட்ட காலத்தில்,


அன்று முதல் இன்று வரை மாறாத ஒன்று,


எங்கள் காதலுக்கு அடையாளமாய்,


இன்றும் தொடரும் ஏராளமான சண்டைகள்!!