வியாழன், 8 செப்டம்பர், 2011 | By: Ananda

திருமணத்திற்கு முன்னும் பின்னும்..













கைப்பேசியை கண நேரமும் பிரியாத வழக்கம்,அன்று,


அவசர,ஆபத்துக்கு கூட,வீடு முழுவதும்


கைப்பேசியைத் தேடும் வழக்கம்,இன்று!!!


கனவுக்கும்,கற்பனைக்கும்,கவிதைக்கும் மட்டுமே


நேரம் இருந்தது, அன்று,


கனவுக்கு இடமில்லாத தூக்கமும்,


கவிதை எழுத முடியவில்லை என்ற ஏக்கமும் மட்டுமே,இன்று!!!!


முழு நேரக் காதல் நினைவுகளும்,சில நேர


எதிர்கால கனவுகளும்,அன்று,


முழு நேர நிகழ்கால சிக்கல்களின்,சிந்தனைக்கு-இடையே,


சில நேர கடந்த கால நினைவுகள் இன்று!!


தொலைவில் இருந்தால் கூட ,தொலைபேசியில் ஓராயிரம்


கதை பேசினோம்,அன்று,


ஒரே வீட்டில்,இருந்தும் கூட,ஒரு நாளில் ஒன்பது வார்த்தைகள்


கூட பேச வழியில்லை,இன்று!!!


பிறக்க போகும் குழந்தைக்கு,காதலிக்கும்போதே


பெயர் வைத்தோம்,அன்று!!!


பிறந்த பிள்ளைக்கோ,புதிதாய்


வேறு பெயர்வைத்து அழைக்கிறோம்,இன்று!!!!


செல்வி திருமதியாய்,காதலி மனைவியாய்


மாறிவிட்ட இந்த இடைப்பட்ட காலத்தில்,


அன்று முதல் இன்று வரை மாறாத ஒன்று,


எங்கள் காதலுக்கு அடையாளமாய்,


இன்றும் தொடரும் ஏராளமான சண்டைகள்!!

என் உயிர் பூ,உனக்காக..
















மணவாளன் கைப்பிடித்தப் பின்,

மறந்துப்போன பழைய நாட்குறிப்பை

தூசித்தட்டி,வெளிக் கொணர்ந்தேன் இன்று,

மண்ணில் இன்னும் மலராத

என் மலர்க்கொடி உனக்காக,

ஆயிரம் கோடி அணுக்கள்

உறைந்திருக்கும் என் குருதியிலே,

முதன் முதலாக உயிர் பெற்றுவிட்ட

என் உயிர்த் துளியடி நீ...

நாட்களை எண்ணிக்கொண்டு காத்திருக்கிறேன்,

என்னை மீண்டும் எழுதத் தூண்டிய

புதுக்கவிதை-உன்னைக் கையில் ஏந்த,

உன் கிள்ளைக் குரல் கேட்க,

உன்னை வாரி அணைக்க,

நீ தத்தி-தத்தி நடை பழகும்

அழகை பார்த்து ரசிக்க,

உன் பிஞ்சு விரல் பிடிக்க,

உன் ஒரு முதல் சொல் என் காதில் ஒலிக்க,

இன்னும் 6 மாதம் காத்திருக்கிறேன் உன் அம்மா!!!!

Thagaval Thozhilnutpam..












கணிதம்,அறிவியல்,தொழில்நுட்பத் திறன்,நுண்ணறிவு,சமயோசிதம், என்று

நுழைவுத் தேர்வுக்கே ஆயிரம் அடிப்படை தகுதிகள்!!

அதையும் தாண்டி நேர்முகத் தேர்வு,

இதையெல்லாம் கடந்து,

ஓரிரு ஆண்டுகள் கடும் தவம் புரிந்ததற்கு கிடைத்த வரமாய்,

ஆயிரக் கணக்கில் மாத சம்பளம்,

லட்சக் கணக்கில் வருட சம்பளம்,

என்று பல்வேறு கனவகளொடு,

எதை எதையோ சாதிக்க போகிறோம் என்ற துடிப்போடு,

கல்லூரி முடித்த கையோடு,

கள்ளம் கபடம் அறியாத புன்னகையோடு,

தனித்தன்மையைக் குறிக்க கொடுக்கப்பட்டது

அந்த அடையாள அட்டை என்ற நம்பிக்கையோடு,

பன்னாட்டு தொழில் நிறுவனத்துக்குள் நுழையும்-

எத்தனையோ மாணவர்கள் அறிவதில்லை,

அந்த அடையாள அட்டை,அவர் தம் அடையாளத்தையே

தொலைப்பதர்க்கு கொடுக்கப்பட்டது என்று,

உள்ளே நுழைந்த ஓர் ஆண்டுக்குள்,

புது புது பாடங்கள்,

போலியாய் சிரிப்பது,

சுய விளம்பரம் செய்வது,

காரண காரியம் ஏற்ப நட்பு கொள்வது,

கீரைக் கட்டுக்குள் சேர்த்து கட்டப்பட்ட

கீரை தண்டுகள் போல் இருப்பது,

நியாய விலைக் கடையின் பின் வரிசையில் நிர்ப்பவர்,

முன் வரிசையில் இருப்போரை தாண்டிச் செல்ல வழி தேடுதல் போல,

எந்நேரமும் சக தொழிலாளியை எப்படி பின் தள்ளுவது என்று சிந்திப்பது,

இப்படி எத்தனையோ மாற்றங்கள்,

இவைதான் தகவல் தொழில்நுட்ப வேலையின் வெற்றி ரகசியங்கள்,

(என்னைப்போல் பலர் வெற்றி பெறாத காரணங்கள்)

ஆட்டு மந்தைகளுக்கும் எங்களுக்கும் எத்தனையோ

ஒற்றுமை இருந்தாலும்,

ஒரு சிறிய வித்தியாசம் உண்டு,

மந்தையின், ஆடுகள் காலையில் மேய்வதர்க்கு திறந்து விடப்பட்டு,

மாலையில் மீண்டும் அடைக்க படுகின்றன,

நாங்களோ காலையில் அலுவலகத்தில் அடைக்கப்பட்டு,

மாலையில் வீடு திரும்ப திறந்து விடப் படுகிறோம்!!!

உடைந்த உறவு





எத்தனை வருட உறவு,

எத்தனை கோடி நினைவுகள்,

பசுமையாய்,செழுமையாய்,மலர்ச்சியாய்,

அஸ்திவாரமாய்,தக்கதுணையாய்,

அன்று இருந்த நம் நட்பை,

பாரமாய்,பாவமாய்,வறட்சியாய்,

அஸ்தியாய்,தளர்ச்சியாய்,

இன்று சிதைந்துவிட்ட நம் நட்பை,

சிறிது சிறிதாய் விஷ ஊசி செலுத்தி

சித்திரவதை செய்வதை காட்டிலும்,

சிதறிய துண்டுகளை பொறுக்கி எடுத்து

ஒட்டவைக்க முயலாமலும்,

மனதை கல்லாக்கிக் கொண்டு,

கருணைக் கொலை செய்து விட்டேன் இன்றோடு!!

இனி இதயச் சுவரில் கீறலாய் விழுந்து,

ஆழ்ந்த ரணமாகிவிட்ட உன் நினைவுகள்,

என் உயிர் நீங்கும்வரை,

மாதத்துக்கு ஒரு முறையோ,

வருடத்துக்கு ஒரு முறையோ,

உன்னை நினைத்து உதிரம் சிந்தி கொண்டேதான் இருக்கும்,

எனினும் என் அறைச்சுவர் அனைத்திலும்

பசுமையாய் வாழ்ந்து,சிரித்துக் கொண்டிருந்த

நம் நட்பின் சித்திரங்கள் மட்டுமே

சிங்காரமாய் கொலுவிருக்கும்!!!
புதன், 29 ஜூலை, 2009 | By: Ananda

காற்றின் திசைக்கெல்லாம்
இசைந்துக் கொடுக்கும் தென்னங் கீற்று,
திசை அறியாமல் வேலி எங்கும்
படரும் கொடி,
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
மணற்போர்வை விரித்த பாலைவனம்,
மரத்தடியில் விழத்துடிக்கும் கிழிந்த இலை,
மெதுவாய் உருகும் பனிக்கட்டி,
மரத்தில் சிக்கி
மீண்டும் பறக்க துடிக்கும் பட்டம்,
பாறையின்மேல் தெறித்து
சிதறிய நீர்த்துளி,
இவற்றுள் எதைக் கண்டாலும்,
கரை தேடும் அலை போல்,
அலைந்து கொண்டிருக்கும் என் மனமே,
நினைவுக்கு வருகிறது!!
திங்கள், 26 ஜனவரி, 2009 | By: Ananda

தனிமை தென்றல்




தோப்பில் இருக்கும்போதுதான்
தனி மரமாய் உணர்கிறேன்,
முளைத்துக் கிடக்கும் இலைகளுக்கு நடுவே-
இருக்கும்போது தான்,
உலர்ந்த ஒற்றைச் சருகாய்,உதிர்ந்து போகிறேன்,
தொடக்கத்திலிருந்தே கிடைக்காத சிலவற்றாலா,
பல வருடங்கள் ஏங்கித் தவித்தப்பின்
கிடைத்த சிலவற்றாலா,
கிடைத்தவை கிடைத்ததின் சுகம்
உணரும் முன்னேயே இழந்து விட்டதாலா,
இனி எத்தனை வருடம் ஏங்கி தவித்தாலும்
கிடைக்க போவதே இல்லை என்பதாலா,
எப்படி சொன்னாலும்,இந்த வலி என் உள்ளே
ஊடுருவி,எங்கோ ஓர் மூலையில்
என் ஆயுள் வரை ஆக்கிரமிப்பு செய்து கொண்டிருக்கிறது!!
சிரிப்பொலியில் மௌனமாய்
சிதறி விழும் கண்ணீர் துளிகலென,
சுற்றி நிறைந்திருக்கும் சத்தங்களில்,
எனக்கு மட்டும் கேட்கும் மௌன இசையென,
கடற்கரை காற்றில் கூட என்னை மட்டும் சூழ்ந்து கொண்டுவிட்டது
இந்த தனிமை தென்றல்.........
செவ்வாய், 23 செப்டம்பர், 2008 | By: Ananda



கவிதை கருவுற்று,
முழுதும் வளர்வதர்க்குள்,
தாய்க் கருத்து
மாண்டு விட்டதால்,
இன்று
ஆரம்பித்து முடிக்கப்படாமல்,
அநாதையாய் நிற்கிறது என் கவிதை
காகிதத்தில்