விட்டு விடுதலை ஆகிவிட்டாய் நீ..
இன்னும் உன் நினைவலை ஓயாது,
கரைபுரண்டு ஓடுகிறது எங்கள் நெஞ்சில்..
இந்த வலியை- வார்த்தையாய்
காகிதத்தில் உதிர்த்து வெளியேற்ற முயல்கிறேன்..
தோல்விதான் மிஞ்சுகிறது..
கூடவே பெருகி ஓடும் கண்ணீர்...
புகைப்படம் தேய்ந்தது.
எனினும் உன் ஞாபகம் தேயவில்லை...
தனித்த அறைகள் எல்லாம் என்னை வதைக்கின்றன...
சுற்றிலும் காற்றுக்கு பதில்,
உன் பிரிவின் வலியை சுவாசிக்கிறேன்..
என் வாழ்வின் ஒவ்வொரு புது நிகழ்வும்,
உன்னோடு பகிர முடியாததால் சிறு கசப்பாகிறது.
என் வலியை காட்டிலும்,
நமை ஈன்றவள் வலியை நினைக்க-
என் நெஞ்சை உடைந்த கண்ணாடித் துண்டுகள்-
கொண்டு கீறி எடுப்பது போல் உணர்கிறேன்.
உன் பிரிவுக்கும் நினைவுக்கும் எங்களை ஆயுள் கைதியாக்கிவிட்டு,
விடுதலையாகி விட்டாய் நீ..
வலியும் நிற்பதில்லை..
வாழ்க்கையும் நிற்பதில்லை..
இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது எங்கள் வாழ்வு..
0 கருத்துகள்:
கருத்துரையிடுக