மீண்டும் அதே கேள்விகள் என்னுள்,
கடவுள் இருக்கிறாரா?
இருப்பின் என்ன உருவம்?
என்ன பெயர்?
நான் கடவுள் நம்பிக்கை கொண்டவளா?
என்னுள் பல வருடங்களாக எழுந்து கொண்டே இருக்கும் கேள்விகள்..
விடைகளையும், எனக்கான உண்மையையும்
இன்னமும் தேடி கொண்டிருக்கிறேன்..
இல்லை என்று மறுக்கவில்லை
இருக்கிறார் என்ற உறுதியும் இல்லை,
எனினும்,
மிகுந்த பசியில், சுடு சோறும், நெய்யும்,
தாளிப்பு மனம் வீசும் ரசமும்,
புலரியின் எகாந்தத்தில், பருகிய தேநீர்
அந்தியில் வண்ணம் குழைத்த வானம்,
மின் கம்பிகளின் மேல் அமர்ந்து கதைக்கும் குருவிகள்,
கூடடையும் பறவைகளின் ஒலி,
மழலையின் சிரிப்பு,
மழையின் வாசம்,
மலையின் மௌனம்,
நீண்ட பாதைகள்,
அணைப்பின் கதகதப்பு,
முத்தத்தின் ஈரம்,
நண்பர்களின் அருகாமை
பூமியெங்கும் சிதறி கிடக்கும் காட்டுபூக்கள்,
கடற்கரை அலையில் நனைந்த பாதங்கள்,
நினைவுகள் சுமந்த புகைப்படங்கள்,
புத்தகத்தின் வாசம்,
சாய்ந்து கொள்ள தோள்,
இருக பற்றிட கை விரல்கள்,
இவற்றில் எல்லாம் ஏதோ ஒரு அற்புதம்
பொதிந்து கிடக்கிறது,
இவற்றுள் தான் எனக்கான பதில்கள் ஒளிந்து கிடக்கின்றன என்று நம்புகிறேன்,
இவை போதாதா எனக்கு!!?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக