நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவள்..என் அம்மா வழி குடும்ப பாரம்பரிய குணங்கள் என்னிடம் மிகுதி. அப்படி நான் பெற்ற குணங்களில் முதல் பாடம் யாதெனில், எந்த உணவு பொருட்களை எந்த உணவகம் அல்லது கடைகளில் சாப்பிட வேண்டும் என்பது. எனக்கு இனிப்புகள் என்றால் பிரியம். அதிலும் ரசமலாய் என்றால் மிகவும் பிரியம். சென்னையில் ரசமலாய் சாப்பிட சிறந்த இடங்களை வரிசை படுத்தி கூற விரும்புகிறேன். அடுத்தமுறை சென்னை செல்லும்போது மறக்காமல் உண்டு மகிழவும்.
சென்னை பாரிமுனை..சௌகார்பேட் பகுதி அணைத்து மொத்த விற்பனைக்கும் பிரசித்தி பெற்றது..சௌகார்பேட் என்றதும் சேட்ஜீ , புடவைகள், சோலி என்று ஞாபகம் வரக்கூடும்.அவையெல்லாம் தவிர்த்து சிறந்த வட இந்திய இனிப்புகள் மற்றும் சமோசா, சாட் வகைகளை சாப்பிட இரண்டு கடைகள் உள்ளன.
1.அகர்வால் பவன்,
கோவிந்தப்ப நாய்க்கர் தெரு , சென்னை 600001
சின்ன கடைதான்..பெரிய ஆடம்பரமோ ஆர்பாட்டமோ அற்ற பெயர் பலகை..எந்த விளம்பரமும் கிடையாது. எனினும் ரசமலாய் சாப்பிட இதைவிட சிறந்த கடை சென்னையில் கிடையாது. ரசமலாய் தவிர பாதாம் கீர், பாசுந்தி, சமோசா இவை அனைத்துமே மிகவும் ருசியாக இருக்கும்.நாவில் கரையும் மிகவும் மிருதுவான ரசமலாய்..
2.காக்கடா ராம்பிரசாத்,
348/343 மின்ட் தெரு, சௌகார்பேட், சென்னை 600001
இந்த கடை காலத்திற்கு ஏற்றாற்போல் இரண்டடுக்கு கண்ணாடி கட்டிடமாக அமைக்கப் பட்டுள்ளது. இங்கேயும் பாரம்பரிய வடஇந்திய இனிப்பு மற்றும் கார வகைகள் மிகவும் அருமையாக இருக்கும்.ரசமலாய், சமோசா, கச்சோரி, டோக்லா மற்றும் பாதாம் கீர் கண்டிப்பாக சுவைக்கவும்.
3.ஸ்ரீ மித்தாய்
இது பல இடங்களில் உள்ளது..சேத்துபட்டு, நுங்கம்பாக்கம், அண்ணா நகர்..இங்கு ரசமலாய், பெங்காலி இனிப்புகள் மற்றும் சாட் வகைகள் அனைத்தும் நன்றாக இருக்கும்.
4. மன்சுக் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்னாக்ஸ்
10, ராமஸ்வாமி தெரு, திநகர், சென்னை 600017
திநகர் ரங்கநாதன் தெருவுக்கு பொருள் வாங்க செல்லாதவர் யாரும் இருக்க முடியாது என்று நினைக்கிறேன். துணிமணி, கம்மல் என்று அனைத்தும் வாங்கி முடித்து களைத்து பசியோடு எங்கு சாப்பிடுவது என்று தேடும்போது பிரதானமாக கண்ணில் படுவது வழக்கமான கூட்டமான சரவண,ஆனந்த,பாலாஜி பவன்கள் தான்..அதை விடுத்து இன்னும் சற்று நடந்தால் அர்ச்சனா ஸ்வீட்ஸ் கடையை தாண்டி வரும் தெருவின் கடைசியில் இந்த கடை உள்ளது. கூட்டமின்றி வடஇந்திய உணவு வகைகள் சுவைக்க ஓர் சிறந்த கடை.
5.ஸ்ரீ கிருஷ்ணா/கிராண்ட் ஸ்வீட்ஸ்
இதற்கென்று கடை தேடி தனியாக செல்ல முடியாது என்போர் அருகில் இருக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் கிராண்ட் ஸ்வீட்ஸ் இல் ரசமலாய்
உண்டு மகிழலாம்.
பின்குறிப்பு : அடையார் ஆனந்த பவன் கடைகளில் வாடிக்கையாக இனிப்புகள் வாங்குபவள் தான் ஆனாலும், கண்டிப்பாக ரசமலாய் மட்டும் அங்கு வாங்குவதில்லை, ஒரு முறை சுவைத்த பிறகு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக