திங்கள், 7 ஜூலை, 2014 | By: Ananda

ஏக்கம்



என்னதான் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து,
ஆடம்பர வாகனங்களில் பயணித்து,
நவநாகரீக வாழ்வு முறையை ஏற்றாலும்,
அந்த மொட்டைமாடி நிலாவுக்கும்,
குட்டிச்சுவர் வெட்டிக் கதைகளுக்கும்,
பேருந்து ஜன்னல் தெறிக்கும் மழைச் சாரலுக்கும்,
ஓட்டமும் கூட்டமுமாய் மின்தொடர் வண்டி பயணத்துக்கும்,
சுட்டெரிக்கும் வெயிலில்,வழியும் வேர்வை-
உறிஞ்சும் அந்த பருத்தி உடைக்கும்,
அடிக்கொருமுறை நின்று புன்னகைத்து பேசும் முகங்களுக்கும்,
அந்த சாலையோர பூக்கடைகளுக்கும்..
வாசலிலேயே வீற்றிருக்க சொல்லும், 
வண்ணக் கோலங்களுக்கும்
ஏங்கதான் செய்கிறது-
இந்த பாழும் மனம்..
வியாழன், 3 ஜூலை, 2014 | By: Ananda

விட்டு விடுதலை ஆகிவிட்டாய் நீ..



விட்டு விடுதலை ஆகிவிட்டாய் நீ..

இன்னும் உன் நினைவலை ஓயாது,

கரைபுரண்டு ஓடுகிறது எங்கள் நெஞ்சில்..

இந்த வலியை- வார்த்தையாய்

காகிதத்தில் உதிர்த்து வெளியேற்ற முயல்கிறேன்..

தோல்விதான் மிஞ்சுகிறது..

கூடவே பெருகி ஓடும் கண்ணீர்...

புகைப்படம் தேய்ந்தது.

எனினும் உன் ஞாபகம் தேயவில்லை...

தனித்த அறைகள் எல்லாம் என்னை வதைக்கின்றன...

சுற்றிலும் காற்றுக்கு பதில்,

உன் பிரிவின் வலியை சுவாசிக்கிறேன்..

என் வாழ்வின் ஒவ்வொரு புது நிகழ்வும்,

உன்னோடு பகிர முடியாததால் சிறு கசப்பாகிறது.

என் வலியை காட்டிலும்,

நமை ஈன்றவள் வலியை நினைக்க-

என் நெஞ்சை உடைந்த கண்ணாடித் துண்டுகள்-

கொண்டு கீறி எடுப்பது போல் உணர்கிறேன்.

உன் பிரிவுக்கும் நினைவுக்கும் எங்களை ஆயுள் கைதியாக்கிவிட்டு,

விடுதலையாகி விட்டாய் நீ..

வலியும் நிற்பதில்லை..

வாழ்க்கையும் நிற்பதில்லை..

இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது எங்கள் வாழ்வு..