வாழ்க்கையின் எதிர்கால லட்சியத்தை மட்டுமே
பார்வையில் நிறுத்தி,
அதை நோக்கி ஒரே மூச்சாய் பயணிப்பவர்களை பார்த்து-
நான் நினைப்பது உண்டு,
பாதையை ரசிக்க நேரமில்லை இவர்களுக்கு,
சக பயணியை பார்க்கவோ பழகவோ விருப்பமில்லை இவர்களுக்கு,
இன்று பேசும் மழலை முதல் சொல் கேட்காமல்,
மழையின் முதல் துளியில் நனையாமல்,
நேசிப்போருடன் சில மணித்துளி மௌனத்தில் கரையாமல்,
நண்பர்களுடன் சிறு குறும்புகள் செய்யாமல்,
பெற்றவர் சிறு குறைகளையும் ஆசைகளையும் தீர்க்காமல்,
கடிவாளமிட்ட குதிரையாய் இலக்கை நோக்கி ஓடிக்கொண்டிருப்பதில்
என்ன பயன் என்று,நான் யோசித்ததுண்டு..
எனினும் சில நாட்களாய்,மற்றொரு கேள்வி எழுகிறது-
என்னுள் எனை நோக்கியே..
இலக்கின்றி , பாதையை மட்டுமே ரசித்துக்கொண்டு-
நடந்தென்ன பயன்??
நதியில் இலையாய்,என் வாழ்க்கை..
எனக்கென்று எந்த இலக்கும் இல்லை,
கடமைகள் தீர்ந்தபின்,தொடர்ந்து செல்ல-
சில ஆசைகள் மட்டுமே உள்ளன..
கடமைகள் தீரும்வரை காலம் கடத்திவிட்டு,
பின் எடுத்து நடத்த எத்தனையோ லட்சியங்கள் இருந்தாலும்-
அதிலும் ஒரு தெளிவில்லை எனக்கு..
பத்து வயது பிள்ளை,முதலில் மருத்துவர்,
பின் பொறியாளர்,பின் விஞ்ஞாணி என்று யோசிப்பது போல,
எனக்கே பிள்ளை பிறந்த பின்னும்,இன்றும் பல ஆசைகள்..
எனக்குள் என்று பிறக்கும் அந்த தெளிவு??
என்று பற்றி எரியும் ஒரே லட்சியத்தின், சீரானச் சுடர்??
எந்த சிறு நொடியின் சலனத்தையும்,அசைவுகளையும்
ரசிக்க தவறாத எனக்கு,
பாதை முடிவில் காத்திருப்பதென்ன??