சனி, 2 மே, 2020 | By: Ananda

ஏகாந்தம்






மரத்துப் போன மனவெளியில், 
மெல்ல உறைந்தப் பனி உருகக் கண்டேன்,
மூலையில் புதைத்துவைத்த உணர்ச்சிகள்-
ஒவ்வொன்றாய் உருக்கொண்டு 
உச்சம்தொட விழைதல் கண்டேன்,
மீண்டும் முளைத்த அதே பழைய ஏக்கங்கள்,
பழைய ஏக்கங்கள் தூண்டி திரியேற்ற 
புதிய சிந்தனைகளின் சலனங்கள்..
சிறு பொரி கிளம்பி பெருந்தீ ஆவது போல்,
மெதுவாய் எரிய துவங்குது அதே வேட்கை..
உன்ன உறங்க உழைக்க மட்டும் பழக்கி வைத்த எண்ணங்கள்,
இன்று 
மண்ணை துளைக்கும் மழை சத்தம் கேட்டு,
தட்டி எழுப்புகின்றன, ஆசையாய் பேராசைகளை,
மண்வாசம் வேண்டும்,
மரக்கிளையில் பூத்துக் குலுங்கும் துளி மலர்கள் வேண்டும்,
அந்தி வானில் விரவி கிடக்கும் வண்ணங்கள் வேண்டும் எனக்கு,
வெறும் வார்த்தைகள் போதவில்லை,
கவிதைகள் வேண்டும் எனக்கு,
வீட்டின் தரைகள் வேண்டாம்,
மரகத புல்வெளியும் , 
கடற்கரை மணலும் வேண்டும் என் பாதங்களுக்கு,
ஜன்னல் வழி நிலா வேண்டாம்,
மலை முகட்டில் பாறை மீதேறி ,
புலரியில் அருணன் உதயம் முதல்,
அந்தியில் அவன் சாய்வது வரை,
காண வேண்டும் இந்த கண்களுக்கு,
சொகுசு இருக்கைகள் வேண்டாம்,
காயல் நீர் மெல்ல கிழித்து,
நீர் சூழல்கல் விரிய படகில் உட்கார்ந்து பார்க்க வேண்டும் எனக்கு,
பூக்கள் வேண்டும் எனக்கு,
வரைகோடுகள் அற்று பூமியெங்கும் சிதறி கொட்டி கிடக்கும் 
காட்டு பூக்கள்..
காற்றும் காடுகளும்,
மலையும் மௌனமும்,
நதியும் நீரும்,
கொட்டும் அருவியும் ,
எல்லாம் நிறைந்த ஏகாந்தமும் வேண்டும் எனக்கு!!