கல்லூரிப் பேருந்தில் எப்பொழுதும்போல அவள் ஏறினாள்..எப்போதும் போல முன்னமே ஏறிவிட்ட அவன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்..அவள் கண்கள் அவனைத்தான் தேடுகின்றன என்று அறிந்திருந்ததால் உள்ளூர புன்னகைத்துக் கொண்டே அவளை பார்த்து கொண்டிருந்தான். அவள் கண்கள் அவனை கண்டுகொண்டன..அவள் முகத்திலும் அதே புன்னகை பரவியது.அவள் ஏதும் அறியாதவள்போல் இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.காலைகளில் பல இருக்கைகள் இடைவெளி விட்டு உட்கார்ந்த அவர்கள், மாலைகளில் முன்னும் பின்னுமான இருக்கைகளில் நண்பர்களோடு உட்கார்ந்து பேசி கொண்டே போவார்கள்..இவை அல்லாது காலை மாலை விடுமுறை நாட்கள் என்று இடைவிடாது தொலைபேசியில் அளவளாவுவார்கள்...அவளோ அவனோ அத்தனை அழகல்ல..ஆனால் அவளை தேடிய அவன் கண்களும் , அவனை தேடிய அவள் கண்களும், தேடிய விழிகளுக்கு கிடைத்த பார்வை பரிசுகளும் அழகு..
80களில் பிறந்த பிள்ளைகளுக்கு புரியும்..கல்லூரிப் பருவம் முழுக்க வீட்டில் எந்த நேரமும் சன் மியூசிக் தொலைக்காட்சி , ரேடியோ மிர்ச்சி மோகம் ஆரம்பித்த காலம் அது..அவர்கள் இருவருக்கும் ஒன்றாக பிடித்து ரசித்த பல காதல் பாடல்கள் இருந்தன..அவர்களுக்குள் வளர்ந்து வரும் நட்புக்கும் காதலுக்குமான போராட்டத்தில், பல பாடல் வரிகள் அவர்களுக்காகவே எழுதப்பட்டது போல் அவர்கள் உணர்வார்கள்.அந்த சமயத்தில் பல பாடல்கள் அவர்களுக்கு பிடித்தவை ஆனாலும், 'தீணா' திரைப்படத்தில் வரும் "சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்" என்ற பாடல் அவர்களுக்கு மிகவும் நெருக்கமானது.எந்த வானொலி அல்லது தொலைக்காட்சியில் அந்த பாடல் வந்தாலும் ஒருவருக்கு ஒருவர் முந்திக்கொண்டு தொலைபேசியில் அழைத்துக் கொள்வார்கள்..எதுவும் பேசாமல் மௌனமாக தொலைபேசியின் இரு மூலையில் அந்த பாடலை இணைந்து ரசிப்பார்கள்..அவர்களுக்கு நடுவே அந்த பாடல் ஆயிரம் கவிதைகள் எழுதிக் கொண்டிருக்கும்...
இன்று 15 வருடங்கள் கழித்து மணம்முடித்து இரு பெண் பிள்ளைகளை பெற்றுவிட்ட அவர்கள், எல்லோரையும் போலவே அலுவலக வேலை, பிள்ளைகள் பள்ளி, ஓட்டம் , சண்டை, சச்சரவு என்று அன்றாட வாழ்க்கை சூழலில் உழன்று எழுந்தாலும்..திடீரென யூடூபில் அதே "சொல்லாமல் தொட்டும் தென்றல்" பாடல் ஒலிக்கும்போதேல்லாம் ஒரு சின்ன பார்வை பரிமாற்றமோ, உதட்டோர புன்னகையோ, விழியோர நீர்த்துளியோ அல்லது விரல்கள் கோர்த்துக்கொண்டோ ஒரு நொடி ,தொட்டுச்செல்லுகிறது அவர்களின் அதே கல்லூரி நினைவும்,காதலும்..