திங்கள், 20 மார்ச், 2017 | By: Ananda

சொத்து பத்து!!

ஆலமரமாய் தாங்கி,
ஆயிரம்முறை திட்டித் திருத்தி,
ஆயிசுக்கும் தைரியமூட்டி,
ஆழ்கடலென எங்கள் 'ஆயா' !!

அதிர்ந்து பேசாதவள்,
அயராது உழைத்து,
அன்பை மட்டுமேச் சொரியும் பூமரம்,
அழகுக் குறையாத மெழுகு என் 'அம்மா' !!

அளந்துதான் பேசுவான்,
அதில் அர்த்தம் அதிகம் இருக்கும்,
அன்பை கொட்டியதில்லை,ஆனால்-
அறிவையும், அறிவுரையும் கொடுத்துச் சென்றான்,
உள்ளத்தில் உள்ளதை உரைத்து காட்டியதில்லை,
உலகம் எப்படி என்று காட்டிச் சென்றான்,
தூக்கிச் சுமக்கவில்லை,
உன் சிறகே உனக்குத் துணை என்று கற்றுக் கொடுத்தான்,
உருவத்திலும்,அலாதியான கிறுக்குத்தனத்திலும்,
அடங்காத வைராக்கியத்திலும்,
என்னை போன்றவன்,
என் கருவறை பகிர்ந்தவன், என் 'அண்ணன்' !!

தோழன்,பிரியமானவன்,
தலைவன்,தந்தை, எல்லாமானவன்,
என் அறிவை செயல்பட செய்வதும் அவன்,
  அதை செயலிழக்க செய்வதும் அவன்,
முதலும் இறுதியுமாய் 
எனை அடக்கிய ஆடவன்,
எனை ஆள்பவன், என்னால் ஆளப்படுபவன்-
என் ஆதவன், என் 'கணவன்' !!

ஆசைக்கும் ஆஸ்திக்கும்,
ஆதிமுதல் அந்தம் வரைக்கும்,
என் இரவு பகலாய்,
என் உயிர் மெய்யாய்,
பேர் சொல்லப் பிறந்த பூம்பாவைகள்,
ஆறு வயதில் நிதானமான நிலவும்,
ஓர் வயதை தொட தத்தி தத்தி
நடைபழகும் நட்சத்திரமும்,
வாழ்வின் பொருளாகிவிட்ட, என் இரு 'மகள்கள்' !!

பள்ளிப் பருவத்தின்
பசுமையான நட்பு,
பல புயல்களை தாண்டிய நட்பு,
கருங்கல்லை கூழாங்கல்லாக மாற்றிய முதல் நதி(அடி) அவள்!!

கல்லூரி முதல் நாள் முதல், இன்று வரை,
மழையில் குடையாய்,இதமான வெயிலாய்,
இனிமையான தலை வலியாய்,
நான் நானாகவே இருக்க இடம் கொடுத்தவள்!!

ஒரே ஊரில் ஒன்றாக கல்லோரி சென்று,
ஒய்யாரமாய் உலா வந்ததும் உண்டு,
ஓராயிரம் பிரச்சனைகளில் ஒன்றாக விழுந்து எழுந்ததும் உண்டு,
தினம் தினம் சிறு கதைகள் பேசுவதில்லை நாங்கள்,
பெரும் இன்ப துன்பங்களை பகிர்ந்துகொண்ட நாங்கள்,
தூரமாய் பேசாமல் இருந்தாலும் என்றும் என் தோழி!!

முதல் காதல் போல முதல் சம்பளமும்,
புது சுதந்திர வேகம்,
அலுவலக வாழ்க்கை,
கேட்க ஆளின்றி துள்ளி திரிந்த காலம் முதல்,
இன்று என் பிள்ளையும் அவள் பிள்ளையும்-
ஒன்றாக விளையாடுவது வரை,
கடந்து வந்த நட்பு!!

நான்கு தோழிகளுக்கு இணையாய்,
ஒரே ஒரு தோழன்,
உரிமைக்கு அர்த்தம் கொடுத்தவன்,
எப்பொழுது எங்கே எதற்கு என்று
கேள்விகள் கேட்டாலும்,
எப்பொழுதும் எங்கேயும் எதற்கும்
வந்து நின்றவன்,எனக்காக!!

சொத்து பத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை நான்,
ஈடில்லாச் சொத்தாக இவர்கள் பத்து பேரை தான்
சேர்த்து வைத்திருக்கிறேன்!!
என் தீதும் நன்றும் இவர்கள் கண்டு ஏற்றவர்கள்,
என் வெற்றியும் தோல்வியும் இவர்களைச் சாரும்!!