திங்கள், 19 ஆகஸ்ட், 2013 | By: Ananda

பூச்சூடாப் பூவை..

 
 
 
நிறைந்த பூக்கூடையை, நித்தமும் தூக்கி சுமந்து,
வீதி  வீதியாய், விற்று விட்டு,
வீட்டுக்கு வந்தபின்  பிள்ளைக்கு அரை முழம் சூட்டி விட்டு,
கடைசி முழம்,கையில் வைத்து,
ஒரு முறை ஏக்கத்தோடு முகர்ந்து விட்டு,
பிரிந்த கணவன் படத்திற்கு சூட்டிய அவளுக்கு,
ஒரு துளி கண்ணீர் தான் மிச்சம் கிடைத்தது,
ஊருக்கு கொடுத்தாலும், உள்ளங்கை சேர-
கொடுப்பினை இல்லை அவளுக்கு..
மல்லிகை மணக்கவில்லை, மனம் நொந்த விதவைக்கு..

வெள்ளி, 26 ஜூலை, 2013 | By: Ananda

மகள்..

 
 
 
அன்று தேக்கு, இன்று தென்னை,

அன்று மலை அருவி, இன்று வாய்க்கால் நீர்,

அன்று பெருங்கடல், இன்று ஓடம்,

அன்று படகு, இன்று துடுப்பு,

அன்று தீப்பந்தம், இன்று திரி விளக்கு,

அன்று கிளை, இன்று வேர்,

அன்று நான், இன்று அவள்,

அன்று மகள், இன்று தாய்..
 
தீபத்திலிருந்து ஏற்றப்படும் இன்னொரு தீபம் போல்,

இன்று நான், நாளை அவள்..
திங்கள், 17 ஜூன், 2013 | By: Ananda

அந்நிய தேசத்து, ஆடம்பர வாழ்க்கை..

 
 
அறைக்கு அறை , நான்கு தொலைபேசிகள்,
 
அறைச் சுவரையே அடைக்குமளவு தொலைக்காட்சி,
 
ஒவ்வொரு முறையும் புதிதாய் அணிந்துக்கொள்ள-
 
அளவுக்கு அதிகமான ஆடைகள்,
 
ஓர் அறை அதற்கென்றே,ஒதுக்க வேண்டிய அளவிற்கு-
 
எண்ணில் அடங்கா விளையாட்டுப் பொருட்கள்,
 
இருக்கும் மூன்று பேருக்கு,இப்படியாக நான்கு அறைகள்,
 
எங்கு சென்றாலும், நான்கு சக்கரங்கள் தேவை,
 
நடக்கவே வேலையில்லை,ஆனாலும் மூன்று பேருக்கு-
 
முப்பது காலணிகள்,
 
ஆண்டுக்கு இருமுறை,உலகளாவிய இன்ப சுற்றுலாக்கள்,
 
ஈறாண்டுக்கு ஒருமுறை முடிந்தால்,தாய்நாட்டு பிரவேசம்,
 
கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுத்துவிட்டால்,
 
பிள்ளைகளுக்கான கடமை தீர்ந்தது,
 
கேட்காமலே மாதம் ஒருமுறை பணம் அனுப்பிவிட்டால்,
 
பெற்றோருக்கான கடமை தீர்ந்தது,
 
இங்கு வீட்டின் நான்கு சுவர்களுக்குள்,
 
புன்னகைப் பூக்கிறதோ இல்லையோ,
 
வீட்டுச் சுவற்றில் ஆணியடித்து மாட்டி வைத்திருக்கிறோம்,
 
எப்போதும் புன்னகைத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை!!
 
வீட்டு வாசலைத் தாண்டிவிட்டால்,
 
முகத்தில் கண்ணாடியை மாட்டிக் கொள்வது போல,
 
நாகரீக புன்னகையையும், சேர்த்து மாட்டிக் கொள்கிறோம்!!
 
சுற்றிலும் ஆடம்பரம் அள்ளி தெறிக்கும் எங்களுக்கு,
 
குணத்திலும் மனத்திலும் மட்டும் ஏழ்மைக் குடிக்கொண்டிருக்கிறது..
 

வியாழன், 25 ஏப்ரல், 2013 | By: Ananda

என் 'கீர்த்தி '

 
சில சமயம், கருந்திரட்சைகளை,
சில சமயம் மீன்களை,
வேறு சில சமயம் படபடக்கும் பட்டாம்பூச்சிகளை-
உன் அழகுக் கண்கள் எனக்கு நினைவூட்டும்..
உனக்கு கயல்விழி, என பெயர்வெய்க்கத் தவறிநேனே-
 
என்று வருந்துகிறேன் பல சமயம்..
உயிரோட்டம் தெறிக்கும் உன் விழிகள்,
குறும்புத்தனம் சொட்டும் உன் குறு குறு பார்வை,
உன் கண்களின் அந்த ஒரு பொட்டு வெளிச்சம்
என் வாழ்வின் இருள் நீக்கப் போதுமானது..
உன் மழலைக் குரலில் என் பெயர் சொல்லி அழைக்கும் ஆனந்தமும்,
எனைக் கட்டி அணைத்து முத்தமிடும் பேரானந்தமும்-
போதுமடி எனக்கு..
அதனினும் பெருஞ்சொத்து வேறில்லை..
என் உயிர்ப்பூ சிந்திய முதல் மகரந்தத் துளியடி நீ-
என் 'கீர்த்தி '!!